ஹிஜாப் அணிய தடை! இலங்கை மக்கள் வங்கி!
ஓட்டமாவடி பிரதேசத்தில் இயங்கி வரும் மக்கள் வங்கியில் கடமை புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் இஸ்லாமிய ஆடை அணியத்தடை விதித்து சாரி மாத்திரமே அணிய வேண்டுமென்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஓட்டமாவடி பிரதேசத்தில் பெருவாரியான முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வரும் குறித்த மக்கள் வங்கியில் இஸ்லாமிய ரீதியிலான ஆடை அணியத்தடை விதித்துள்ளதாக வெளியான செய்தி இப்பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இஸ்லாமிய ஆடைக்கெதிராக குறித்த வங்கி முகாமையாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அவரது அறிக்கையைப் பின்பற்றி பிராந்திய முகாமையாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விளக்கங்கோரல் கடிதம் தொடர்பிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
18.02.2026ம் திகதியிடப்பட்டு “வங்கி ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ஆடைக்குறியீட்டைப் பின்பற்றுதல்” எனும் தலைப்பில் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விளக்கங்கோரல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,
11.02.2026ம் தேதி இட்டு ஓட்டமாவடி கிளை முகாமையாளரால் எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி உடை அணியத்தவறி விட்டீர்கள் என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது வங்கியின் நடத்தை விதிகள் தொடர்பான சுற்றறிக்கையின் விதிமுறைகளை மீறும் செயலாகும்.
வங்கியின் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ஆடைக்குறியீடு தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அனைத்து ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டிய முறையான உடை குறித்து தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட ஆடைக்குறியீட்டிற்கிணங்க பெண் ஊழியர்கள் சேலை அணிய வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றத்தவறினால், கடிதம் கிடைத்தவுடன் உடனடியாக விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என அவ்விளக்கங்கோரல் கடிதத்தில் பிராந்திய முகாமையாளரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


