நேப்பாளம் வெள்ள அனர்த்தத்துக்கு இலங்கை 1 மில்லியன் அமேரிக்க டொலர் உதவி!

நேப்பாளம் வெள்ள அனர்த்தத்துக்கு இலங்கை 1 மில்லியன் அமேரிக்க டொலர் உதவி!

28 ஆகஸ்ட்2026,

 நேபாள வெள்ளப் பேரிடருக்கு இலங்கை ரூ.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கும் வகையில், இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. 

நேபாளம் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கைப் பேரிடரில் வெள்ளம், பாரிய நிலச்சரிவுகள் மற்றும் பனிப்பாறை சரிவு உள்ளிட்ட சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள், பாலங்கள், வீடுகள் மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளும் கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் தொடர்ச்சியான வெள்ள அபாயத்தால் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. 

🇱🇰 இலங்கையின் மனிதாபிமான உதவி

இந்த கடுமையான பேரிடரைத் தொடர்ந்து, நேபாள மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க டொலர் 1 மில்லியன் நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்த ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட நேபாள மக்களுடன் இலங்கை உறுதியா நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒற்றுமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாள மக்களுக்கு இலங்கை தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிஷிர் கானால் உடன் தொலைபேசியில் கலந்துரையாடி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபம், ஆதரவு மற்றும் ஒற்றுமையைத் தெரிவித்துள்ளார். 

நேபாளத்தின் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து நெருக்கமாக ஈடுபட்டு, தேவைக்கேற்ப மேலதிக உதவிகளை வழங்குவதற்கான வழிகளை ஆராயும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்த நிதியுதவி அவசர நிவாரணம், மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. 

Tamiloh.com